×

கோவை அரசு மருத்துவமனையில் 11 மாதத்தில் பாம்பு கடிக்கு 893 பேருக்கு சிகிச்சை

கோவை, டிச. 31: கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 11 மாதங்களில் பாம்பு கடி காரணமாக 893 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 35 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் சுமார் 276 பாம்பு வகைகள் உள்ளது. இதில், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் போன்ற பாம்புகள்தான் விஷ பாம்புகள். மற்றவை விஷமற்றவை. பாம்பு கடிக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பாம்பு கடிக்கு நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் மருந்தியியல் துறை பேராசிரியர் 2010ம் ஆண்டு ஆய்வின்படி, தமிழகத்தில் பாம்பு கடியினால் ஆண்டிற்கு 10 ஆயிரம் வரை உயிரிழப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த உயிரிழப்பு என்பது தற்போது மிகவும் குறைந்துள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாகவும், உயிரிழப்பு தொடர்பான அறிக்கையை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து பாம்பு கடிக்கு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மொத்தம் 893 பேர் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். பாம்பு கடியால் ஆண்டிற்கு 10 ஆயிரம் உயிரிழப்பு ஏற்படுவது என்பது சாத்தியம்
இல்லை. பாம்பு கடித்தால் உடனடியாக அருகேயுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கவும். கடிபட்ட நபரை நடக்க விடக்கூடாது. இதனால், விஷம் ரத்தத்தில் விரைந்து கலந்துவிடும். கடிபட்ட இடத்தில் லேசான கட்டுப்போட வேண்டும்.
இறுக்கமாக போடக்கூடாது. மயக்கம் அடைய விடக்கூடாது. பாம்பு கடியினால் இறப்பவர்களை விட பயத்தினால் இறப்பவர்கள் அதிகம். எனவே, பாம்பு கடித்தால் பயப்பட வேண்டாம். 80 சதவீத பாம்புகள் விஷத்தன்மையற்றது. சிலருக்கு பாம்பு கடியினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Coimbatore Government Hospital ,
× RELATED ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில்...